“தமிழ்நாடு இனி இடது பக்கம்” என்ற முழக்கத்தோடு, முதன்மையான மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து வரும் அக்டோபர் 15-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்த உள்ளன. சமுதாயத்தின் அனைத்துச் சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அக்டொப்பர் 15-ம் தேதி எழுச்சி பேரணி மற்றும் மாநாடு சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டு, அவற்றுக்கான அடிப்படைக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என சி.பி.ஐ மாநில துணை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:
இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், “தமிழ்நாடு இனி இடது பக்கம்” என்ற தலைப்பிலான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி மற்றும் மாநாடு அக்டோபர் 15-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வெண்மணி இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் சி.பி.ஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ​கே.சுவாமிநாதன், ​சி.பி.ஐ மாநில துணை செயலாளர்கள் என்.பெரியசாமி, எம்.ரவி மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்திற்கு பின்னர் மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
தமிழ்நாட்டில் அறிவுத் துறையினரும், உழைக்கும் மக்களும் ஒரு திட்டவட்டமான இடதுசாரி திசைவழியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதற்கு வடிவம் கொடுக்கும் வகையில், முதன்மையான மூன்று இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ (எம்) மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சி.பி.ஐ – எம்.எல்) கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்த ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளனர்.
​தேசிய அளவில் ஐக்கிய முன்னணி ஆட்சியை அமைக்கும் எல்லையை இடதுசாரிகள் தொட்டு நின்ற வரலாறு உண்டு. தற்போது, புதிய தேடலுக்கான ஒரு அரசியல் மாற்றம் உருவாகி வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனுக்காக இந்த மாற்றம் ஏமாற்றமில்லாத நீடித்த அமைதியைத் தரும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்வரும் காலங்களில் இந்த அணி மேலும் பறந்து விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் இந்த பேரணி மற்றும் மாநாட்டில் சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டு, அவற்றுக்கான அடிப்படைக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். மேலும், அக்கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் தொடர் இயக்கங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிலாளர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முன்வைக்கப்படும்.
இந்த எழுச்சிப் பேரணி மற்றும் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
