இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 

இதற்கிடையில் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகத் தோழமைக் கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது. இப்படியாக இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் தொகுதியில் தவெக துணைப் பொதுச் செயலாளர் மரகதம் குமரவேலுவும் தாராபுரம் தொகுதியில் திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (10.9.2026) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு  அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

அதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குத் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12வது வார்டு முன்னாள் உறுப்பினருமான பானுமதி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link