மாஸ்கோ: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின், நாளை இந்தியா வர இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வரும் செப்.,12 மற்றும் 13ம் தேதிகளில் புதுடில்லியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியா வர உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டில்லி வருவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில்; ரஷ்ய அதிபர் புடின் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியையும் தனியாக சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
