பாக்கெட் உணவு பொருட்களில் எச்சரிக்கை லேபிள்: தேச நலன் கருதி முடிவெடுக்க கோர்ட் வலியுறுத்தல்

புதுடில்லி:’நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் கவலை கொள்கிறோம். குறிப்பாக குழந்தைகளின் உடல்நலம் மிகவும் முக்கியமானது. எனவே, பாக்கெட் உணவுப் பொருட்களில் உள்ள அதிக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறித்து, எச்சரிக்கும் வகையில், முன்பக்கத்திலேயே லேபிளாக அச்சிட்டு ஒட்டுவது தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவு எடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுதும் உடல் பருமன் பொது சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவு உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்க்கப்படுவதால், அதை விரும்பி வாங்கி உண்ணும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து பாக்கெட் உணவுகளில் இடம்பெற்றுள்ள உணவுப் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு இருந்தால் அதை பற்றி எச்சரிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாக்கெட் உணவுகளின் முன்பக்க முகப்பில் எச்சரிக்கை லேபிள் ஒட்டும் முறையை அறிமுகம் செய்வதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமதம் செய்து வருவதாக அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேச மக்களின் ஆரோக்கியத்தில் தான் அதிக கவலை கொள்கிறோம். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, உணவு பாக்கெட்டின் முன்பக்க முகப்பில் எச்சரிக்கை லேபிள் ஒட்டும் விவகாரம் தொடர்பாக, தேசிய நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கு சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதில், ‘பாக்கெட் உணவுகளில் என்னென்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் எப்போதும் பின்புறத்தில் தான் அச்சடிக்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக இருந்தால், அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை ஆணையம் வகுத்துள்ளதா?’ என வினவினர்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ”குர்குரே போன்ற நொறுக்கு தீனிகளையும், முட்டை, முந்திரி போன்ற போன்ற ஊட்டச்சத்து உணவுகளையும் ஒரே அளவில் அரசு கருதுகிறது. அதிக அளவில் பதப்படுத்தப்படும் ‘அல்ட்ரா பிராசஸ்டு’ உணவுகளுக்கு கடுமையான எச்சரிக்கை குறியீடு அவசியம். இத்தகைய பொருட்களுக்கு பிரத்யேக நிறத்தில் எச்சரிக்கை குறியீடுகளை வழங்க வேண்டும்,” என யோசனை தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அனைத்து துறையினரும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக விரிவான உத்தரவு ஓரிரு தினங்களில் பிறப்பிக்கப்படும். இணையதளத்தில் பதிவேற்றப்படும் அந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் படித்து, அடுத்த விசாரணைக்கு தயாராக வேண்டும்’ என கூறி, வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link