ஷி ஜின்பிங் சந்திப்பு: புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா பொருளாதார பேச்சுவார்த்தை?

எழுதியவர்: Shubhajit Roy

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) நீண்டகாலமாக நீடித்த ராணுவப் பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு புதிய வேகம் அளிக்கும் வகையில், செப்டம்பர் 12-13 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், அக்டோபர் 2019-இல் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.

உயர் வர்த்தக பற்றாக்குறை, சீன சந்தைக்கான அணுகல் சிக்கல்கள், இந்தியாவில் முதலீடுகள் இல்லாமை, இந்திய மற்றும் சீன வணிகங்களுக்கான விசா கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த உறவில் சுமுகமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு மூலோபாய பொருளாதார பேச்சுவார்த்தையை (Strategic Economic Dialogue) தொடங்க இரு தரப்பும் பணியாற்றி வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு மூலாதாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே பீஜிங்கில் சமீபத்தில் நடைபெற்ற எல்லைப் பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் விவாதித்து ஆய்வு செய்வார்கள் என்றும், எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை மேலாண்மையில் “ஆரம்பகால மற்றும் குறிப்பிடத்தக்க அறுவடை” (early and substantial harvest) குறித்த விவாதங்களை முன்னோக்கி கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பீஜிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட எட்டு முடிவுகள் மற்றும் ஒருமித்த கருத்துக்களில், கிழக்கு மற்றும் மத்திய துறைகளில் இரண்டு புதிய எல்லை ராணுவ ஹாட்லைன்கள், ராணுவ கமாண்டர் அளவிலான கூட்டங்களுக்கான இரண்டு புதிய சந்திப்பு புள்ளிகள் மற்றும் எல்லை தாண்டிய நதி சந்திப்பு ஆகியவை அடங்கும். இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதற்றமான உறவுகளுக்கு மத்தியில் ஷி ஜின்பிங் தவிர்த்திருந்த நிலையில், தற்போது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்பது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான சமிக்ஞையாகும்.

அக்டோபர் 2024-இல், ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது ஷி மற்றும் மோடி சந்தித்தனர். அந்த விவாதங்களைத் தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பரில் கிழக்கு லடாக்கில் உள்ள LAC வழியே படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறையை இரு தரப்பும் நிறைவு செய்தன. அன்றைய தினம் முதல், உறவுகளை சீராக வைக்க சிறுகச் சிறுக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நேரிடை விமானங்கள் மீண்டும் தொடங்குவது, விசா கட்டுப்பாடுகள் தளர்வு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை புதுப்பித்தல் மற்றும் சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவை சாத்தியமாயின.

இருப்பினும், விசா மறுப்புகள் மற்றும் இந்திய வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகள், எல்லை தாண்டிய நதி தரவுகளைப் பகிர்வதில் உள்ள சவால்கள் மற்றும் மே 2025-இல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா மற்றும் பாகிஸ்தானின் தீவிர கூட்டுச் செயல்பாடு உள்ளிட்ட அழுத்தமான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. இந்தப் கவலைகளை சீனத் தலைமையிடம் இந்தியத் தரப்பு எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஏ.சி-இல் படைகளைக் குறைப்பது (de-escalation) தொடர்பான விஷயமும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கும். எல்.ஏ.சி-இன் இருபுறமும் இன்னமும் 50,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோதிலும் சீன வணிகங்களை வரம்பிற்குட்படுத்துவது, இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து சீன தரப்பிற்கு கவலைகள் உள்ளன. இந்த அனைத்து கவலைகளும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது வர வாய்ப்புள்ளது. ஆனால், இந்த உச்சிமாநாடு அளவிலான கூட்டத்தில் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த சவாலை விவரித்த முன்னாள் இந்திய சீனாவுக்கான தூதர் கௌதம் பம்பாவாலே, “கிழக்கு லடாக்கில் பி.எல்.ஏ (சீன ராணுவம்) செய்த நடவடிக்கைகள் இருதரப்பு உறவை சுமார் 10 அடிகள் பின்னோக்கித் தள்ளியது. 2024 முதல் நாம் உறவைச் சீரமைக்கத் தொடங்கியதிலிருந்து, நாம் 3 அடிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் நிகர விளைவு இன்னமும் எதிர்மறையாகவே உள்ளது, எனவே செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அதே வேளையில், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் தாக்கம் ஆகிய பொதுவான கவலைகளும் விவாதங்களில் இடம்பெறும் என்றும், இது பிரிக்ஸ் விவாதங்களிலும் எதிரொலிக்கும் என்றும் மூலாதாரங்கள் தெரிவிக்கின்றன.

மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் பகுதி அடைப்பினால் ஏற்படும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிப் போரினால் எழும் சவால்கள் குறித்து மோடி மற்றும் ஷி ஆகிய இருவருக்குமே பொதுவான கவலைகள் உள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் இணைந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நிலையற்ற மற்றும் கொந்தளிப்பான புவிசார் பொருளாதாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மோடியும் ஷி ஜின்பிங்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். “மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணிதிரள்வது எதுவுமில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தாலும், இந்த நாடுகளுக்கு புவிசார் அரசியலில் “பிற விருப்பங்களும் (options)” உள்ளன என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்தும் சக்திவாய்ந்த சமிக்ஞையாக இந்த சந்திப்பு இருக்கும்.

Source link