நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட நரம்பியல் வேதிப்பொருட்கள் வெளியாகி கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்துகின்றன.
ஒற்றைத் தலைவலி திடீரென ஒரே ஒரு காரணத்தால் மட்டும் வருவதில்லை; பல்வேறு சிறிய தூண்டுதல்கள் ஒன்றிணைந்து உடலின் வலி தாங்கும் அளவை மீறும்போது இந்நோய் வெளிப்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வானிலை மற்றும் காற்றழுத்த மாறுபாடுகள், உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவை இதனைத் தூண்டுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவில் ஏற்படும் திடீர் சரிவும், மாதவிடாய் முற்றிலும் நிற்பதற்கு முந்தைய பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் கடுமையான ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.
மைக்ரேன் பாதிப்பு நான்கு முக்கிய கட்டங்களாக நிகழ்கிறது. ஆரம்ப கட்டத்தில் அதிக சோர்வு, கொட்டாவி மற்றும் கழுத்து வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்படும். இரண்டாம் கட்டமான ‘ஆரா’ (Aura) நிலையில் பார்வை மங்குதல், கண் முன்னே வெள்ளைப் புள்ளிகள் அல்லது வளைந்த கோடுகள் தோன்றும். மூன்றாம் கட்டத்தில் 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய கடுமையான தலைவலியும் வாந்தியும் ஏற்படும். இறுதிக் கட்டமாக தலைவலி குறைந்த பின்னரும் கூட உடல் சோர்வு மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத மந்தநிலை ஓரிரு நாட்கள் வரை நீடிக்கும்.
ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த தினசரி வாழ்க்கை முறையை சீராக வைத்திருப்பது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் உரிய நேரத்தில் சத்தான உணவுகளை உட்கொள்வது மற்றும் போதுமான நீர்ச்சத்து உடலில் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம். சாக்லேட், காஃபின் போன்ற தூண்டுதல்களை கவனித்து தவிர்ப்பதும், வார இறுதி நாட்களில் ஏற்படும் திடீர் பழக்கவழக்க மாற்றங்களைத் தவிர்ப்பதும் பலன் தரும்.
மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரை வலி தீவிரமடைவதற்கு முன்பே ஆரம்ப நிலையிலேயே மருந்து உட்கொள்வது மட்டுமே பலன் தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குமட்டல் மாத்திரைகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் டிரிப்டான்கள் (Triptans), இபுபுரூஃபன் போன்ற மருந்துகள் பயன்படும். பாராசிட்டமால் குறைவான பலனையே தரும்; தலைவலியை மேலும் மோசமாக்கும் என்பதால் கோடீன் மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். மெக்னீசியம், வைட்டமின் பி2 சத்துக்கள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும் சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும். இதுதவிர, சிஜிஆர்பி (CGRP) தடுப்பு சிகிச்சைகள், யோகா, அக்குபஞ்சர் போன்ற மாற்று வழிகளும் தீவிர ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.
இனி விசில் சின்னம் நிரந்தரம்..!! தவெக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிப்பு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!
