டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு பாரத் மண்டபத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பு உருவாக்கின. 2024 ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்தன. அதே போல, 2025ல் இந்தோனேசியாவுடன் சேர்த்து மொத்தம் 11 நாடுகளுடன் இந்த அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் 2 நாட்கள் (செப்டம்பர் 12-13) நடக்க உள்ளது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் தங்கும் ஓட்டல்கள் அனைத்தும் காவல்துறையின் கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, டெல்லி முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகிறார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதே போல, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அவரது வருகையைச் சீனா நேற்று உறுதி செய்தது. இப்பயணத்தின் போது ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாநாட்டின் நிறைவு நாளான நாளை மறுதினம், அவர் பிரதமர் மோடியைச் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது தலைமைத்துவத்தின் கீழ், ‘குளோபல் சவுத்’ (வளரும் நாடுகள்) எனப்படும் நாடுகளின் முக்கிய வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த அமைப்பை வழிநடத்த இந்தியா இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
