புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் ஒரே பஸ்ஸில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வரும் செப்.,12 மற்றும் 13ம் தேதிகளில் புதுடில்லியில் நடைபெற இருக்கிறது. பாரத் மண்டபத்தில் நடக்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியா வர உள்ளதால், தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு அரங்கிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாதுகாப்பாக செல்லவும், அதேநேரத்தில், டில்லியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் விதமாகவும், 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 14ம் தேதி வரையில் பாரத் மண்டபத்தை சுற்றியுள்ள சாலைகளை போலீசார் தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற் இருக்கும் மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் ஒரே பஸ்ஸில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்லி வளாகத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ்ஸில், அமைச்சர்களும், முதல்வர்களும் ஒரே சமயத்தில் வரவழைக்கப்பட்டு, பாரத் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டினால், பொதுமக்களுக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
