பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் – பாக்கியம் இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்த அவர், குடும்ப வறுமையால் நண்பர்களின் உதவியுடன் கல்வியைத் தொடர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, துறைத் தலைவராக உயர்ந்து ஓய்வு பெற்றார். 1960களிலிருந்து பட்டிமன்றங்களில் நடுவராகத் தொடங்கி, சமூக, குடும்ப, இலக்கியத் தலைப்புகளில் நகைச்சுவையுடன் உரையாற்றி மக்கள் மனதை வென்றார். தொலைக்காட்சிகளிலும் உலகெங்கும் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி, தமிழை எளிய நடையில் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான, ‘பாய்ஸ்’, 2007 ஆம் ஆண்டு ரஜினி ரடிப்பில் வெளியான ‘சிவாஜி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் பேரறிஞர், திருக்குறள் செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..” என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் அவர் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது மறைவு தமிழ் உலகிற்கு பெரும் இழப்பாகும். சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், தலைவர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 5ம் தேதி சிவகாசியில் நடந்த சன் டிவி சிறப்பு பட்டிமன்றத்தில், நடுவராக பங்கேற்று சிறப்பித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
