மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11 தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ’முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது’ என விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்கு பாஜக அமைச்சர் நிதேஷ் ராணே ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஆனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், இது போன்ற செயல்கள் சமூகத்தில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு மோசமான செயல் என்று விமர்சித்திருந்தனர். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”பண்டிகை என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தால், அதில் தவறேதும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அம்ருதாவின் இந்த கருத்துக்கு உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”கர்பா நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பங்கேற்பதை வரவேற்றுள்ள அம்ருதா, அவரது கணவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள பாஜக அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மிகப் பெரியது” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மராட்டிய அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.
