புதுச்சேரி மாநில 2026 சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் ரெங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப்பொற்ற அவர், மங்கலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பாளரை அறிவித்த CPI
இந்த சூழலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்த குழப்பத்தில் இடதுசாரிகள் புதுச்சேரியில் ஓரிரு தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. அவ்வைகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உழவர்கரை தொகுதில் நாரா கலாநிதி மாறன் போட்டியிட்டு 402 வாக்குகள் பெற்று 8ஆம் இடம் பிடித்தார்.
தமிழகத்தில் இழுபறியில் தொடரும் ஆதரவு
இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூடி ஆலோசித்து தங்களது கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் அறிவித்தனர்.
ஆனால் இடதுசாரிகள் ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே தவெகவிற்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனும் நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளோம் என தெரிவித்து வருகிறனர். மேலும் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில செயற்குழு கூட்டம் கூடியே முடிவு எடுக்கப்படுமென தெரிவித்தனர்.
CPI-க்கு ஆதரவு அளிக்குமா தவெக?
தமிழகத்தில் இடைத்தேர்தல் தொடர்பாக இழுபறி நீடிக்கும் இந்த சூழலில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் தனி கவனம் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நேயம் மக்கள் கழகம் கூட்டணி சார்பில், நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர் விநாயகம் போட்டியிட்டு 5583 வாக்குகள் பெற்று இரண்டாம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது தனித்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சியினை சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ஆனந்திடம் ஆதரவு கோரி கடிதம் வழங்கிய CPI
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து இடதுசாரிகளின் முடிவு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை அதரிக்க கோரி, அக்கட்சி சார்பில் தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் என். ஆனந்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறுவதில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதிகின்றனர்.
