”நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.35 லட்சம்”; ஏற்க மறுக்கும் மக்கள்

சுவீடன், கடந்த பல ஆண்டுகளாகப் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வந்த ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வந்தது. ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தற்போது ஏராளமான அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.  

குறிப்பாக, ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவீடனில் குடியேறி வசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது நாட்டின் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கும் விதமாக ஆளும் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், ஏற்கெனவே நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே இருந்து வந்து, சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றால், அவர்களுக்கு 3,50,000 குரோனா (ரூ.35 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக சுமார் 1.3 பில்லியன் குரோனா, (ரூ.1,300 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீண்ட காலமாக வசித்து வரும் வெளிநாட்டினரை மீண்டும் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பச் செய்வதை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், குடியேறிகளில் பெரும்பலனோர், இந்த அறிவிப்பை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ”எங்களுக்கு நிதியை விட சுதந்திரம் மிக முக்கியம், அதனால், நாங்கள் இந்த நாட்டை விட்டுப் போகமாட்டோம். அதோடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் இந்த நாட்டுடன் பிணைந்துள்ள சூழலில், எங்களால் இந்நாட்டை விட்டு வெளியேற முடியாது” என்று தெரிவித்து வருகின்றனர்.  

Source link