காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அந்த வகையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘மாணவர் குரல்’ என்ற பெயரில் பலவேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே ராஜஸ்தானின் கோட்டா, உத்தராகாண்ட்டின் டேராடூன், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சி மூலம் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக வரும் 19-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற உள்ள ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் அவர் மாணவர்களைச் சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், தற்போது இந்தியாவின் கல்வி அமைப்பு இளம் தலைமுறையினரைக் கைவிட்டு விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது சமூக வலத்த்ளப்பக்கதில், “இந்தியாவின் கல்வி அமைப்பு, எந்தத் தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அந்தத் தலைமுறையையே அது கைவிட்டுவிட்டது. தேர்வு வினாத்தாள்கள் கசிவது, தாங்க முடியாத கட்டணங்கள், சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள் எனப் பல சிக்கல்கள். லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் நேர்மையாக உழைத்தாலும், இந்த அமைப்பு அவர்களை ஏமாற்றவே செய்கிறது.
இக்குறைகளைச் சரிசெய்வதற்கான முதல் படி, நாள்தோறும் இந்தச் சிக்கல்களை எதிர்கொள்பவர்களின் கருத்துகளுக்குச் செவிமடுப்பதே ஆகும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே… கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை நீங்கள் ஏன் இழந்துவிட்டீர்கள்?
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக உங்கள் அனுபவங்கள், ஆதாரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
