தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு நேற்று (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அங்குக் குவிந்திருந்தனர். அப்போது அவர்களைக் கண்டதும் நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் விஜய், கைகளால் ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து, மகிழ்ச்சியுடன் கையசைத்துத் தனது லண்டன் பயணத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய்யைப் பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று(11.09.2026) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், விசில் அடித்தும், “தலைவா… தலைவா…” என முழக்கங்களை எழுப்பியும் பூங்கொத்துகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதே சமயம் இங்கிலாந்தின் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திப்பதுடன், தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட் நகரம் அமைப்பதற்காக லண்டனில் உள்ள புகழ்மிக்க சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்யூட் வளாகத்தையும் அவர் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
