சென்னை: ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டங்களில், 15,000 கோடி ரூபாய் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான வழிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆராய்ந்து வருகிறது.
தமிழக குடிசை மாற்று வாரியம், கடந்த தி.மு.க., ஆட்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக அரசு ஒதுக்கும் நிதி, மத்திய அரசின் பிரதமரின் வீட்டுவசதி நிதி ஆகியவையே இந்த வாரியத்தின் பிரதான ஆதாரமாக உள்ளது. இத்துடன் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதியையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பயன்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வீட்டுவசதியின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கான செலவும் அதிகரிப்பதால், கூடுதல் நிதியை திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், தனியார் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்காக, கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தனியார் கட்டுமான நிறுவனங்கள், இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில், தனியார் பங்கேற்பு வாயிலாக, 15,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதில், தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.
நிலத்தை கொடுத்து, அதில் தனியாரை கட்டடம் கட்டி, ஒரு பகுதியை வாரியத்துக்கும் மீதியை அவர்கள் விற்பதற்கும் அனுமதிக்கலாமா என்பது உட்பட, பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.
இதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
