மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில் 3-1 என மலேசியாவை வீழ்த்தியது.
சீனாவின் மொகியில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (20 வயது) 10வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் பங்கேற்ற 4 போட்டியில் 3 வெற்றி, 1 ‘டிரா’ செய்த இந்தியா, 10 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
நேற்று இதில், ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மலேசியாவை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 16 வது நிமிடத்தில் இந்தியாவின் அன்மோல் எக்கா, முதல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் சுக்விந்தர் (51) ஒரு கோல் அடித்தார். மீண்டும் மிரட்டிய அன்மோல் (54) மற்றொரு கோல் அடித்தார்.
மலேசிய தரப்பில் கடைசி நிமிடத்தில் ராகுல் (60) ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, பாகிஸ்தான் மோதின. இதில் தென் கொரியா 4-1 என வெற்றி பெற்றது.
நாளை நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் கொரிய அணிகள் மோத உள்ளன.
8 வது முறை
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி, 8வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் 2004, 2008, 2015, 2023, 2024 என தொடர்ந்து 3 முறை உட்பட, 5 முறை சாம்பியன் இந்தியா ஆனது. இரண்டு முறை (1996, 2000) இரண்டாவது இடம் பெற்றது.
இன்று அரையிறுதி
பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் கொரியாவை சந்திக்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா 4-1 என தென் கொரியாவை சாய்த்தது. மீண்டும் அசத்தினால் பைனலுக்கு முன்னேறலாம். மற்றொரு அரையிறுதியில் சீனா, ஜப்பான் மோதுகின்றன.
