“தவெக அரசு அவசர கதியில் செயல்படக்கூடாது”

நில வகை மாற்றம் செய்து அனைவருக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ வடசென்னை மாவட்டக் குழு சார்பில், மிண்ட் அருகில் நேற்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெ.சண்முகம், “புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் அவசர அவசரமாக ஒரு அரசாணையை வெளியிட்டுருக்கிறது. இந்த தலைமை செயலகம் கடுமையான இட நெருக்கடியிலும், போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கி இருக்கிறது. ஆகவே தலைமை செயலகம் ஒரு பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வந்திருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்து கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அரசினர் தோட்டத்தில் ஒரு புதிய சட்டப்பேரவையை கட்டப்பட்டு பிறகு அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இப்போது வந்திருக்கிற புதிய அரசு பட்டினப்பாக்கத்தில் அந்த தலைமை செயலகத்தை அமைப்பது என்று அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

இதுபோன்ற தலைமை செயலகம் அல்லது அரசு தலைமை அலுவலகங்கள் ஒரு நீண்ட காலத்திற்கான கட்டுமானம் என்கிற முறையில் இது போன்ற பிரச்சனைகளில் அவசர கதியில் அரசு செயல்படக்கூடாது. பட்டினப்பாக்கத்தில் அவர்கள் பார்த்திருக்கிற இடத்தில் அதை சுற்றி இருக்கக்கூடிய மீனவ கிராமங்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குரலுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும். எல்லா தலைமை அலுவலகங்களும் சென்னை நகரத்துக்குள் இருக்கிற போது ஒட்டுமொத்தமாக சென்னைக்கு வெளியே தலைமை செயலகத்தையும் சட்டமன்றத்தையும் கொண்டு செல்வது என்பதும் பொருத்தமாக இருக்காது.

இதில் ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி பொருத்தமான இடத்தை அனைவரும் ஏற்கத்தக்க ஒரு இடத்தை கண்டறிய வேண்டும். அதுவரைக்கும் இப்போது அரசு தேர்வு செய்திருக்கக்கூடிய இடத்தில் எந்தவிதமான பணிகளையும் துவங்க கூடாது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்ய நாளைய தினம் கட்சியினுடைய மாநில செயற்குழு கூட்டம் என்பது நடைபெற இருக்கிறது. நாளை விவாதித்து எங்களுடைய முடிவை தெரிவிப்போம்” என்று கூறினார். 

Source link