‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா(90) வயது மூப்பு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவு தமிழ் சமூககத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு முடிந்த பிறகு, தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூரி, “நம் இல்லங்களின் ஒவ்வொரு சிறப்பான நாளும் அவரது குரலோடுதான் தொடங்கியது. சமூக அக்கறை, பிள்ளை வளர்ப்பு, உறவுகளின் மேன்மை, அர்த்தமுள்ள வாழ்க்கை என ஒவ்வொன்றையும் தனது எளிமையான வார்த்தைகளால் நமக்குக் கற்றுத் தந்தவர் சாலமன் பாப்பையா அவர்கள். தமிழரின் அடையாளத்தையும், மதுரை மண்ணின் மணத்தையும் தனது பேச்சில் சுமந்து வந்த அந்தக் குரல் இன்று ஓய்ந்திருக்கலாம்… ஆனால் அவர் விதைத்த வாழ்க்கை நெறிகளும், தமிழுக்குச் சேர்த்த பெருமையும் தலைமுறைகள் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மறைவு நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
