“மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை” – ஆவணத்தைக் கேட்ட அமைச்சர் நிர்மல்குமார்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு விழா மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடன் இன்று (12-09-26) கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “வருகிற 17ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலுடைய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து முடிவுக்கு கடைசி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த விழாவில் போது பார்க்கிங் வசதிகள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அத்தியாவசிய வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் வந்து போகிற வரைக்கும் எந்த சிரமும் இல்லாத அளவுக்கு வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளது. சுமார் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். கோவிலை சுற்றி இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். மாநகர் முழுவதும் 1,000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போதுமான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து மிசா குறித்து மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு செல்லவில்லை என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். இதுவரைக்கும் மிசாவில் கைதான எல்லோரும் தடுப்புக்காவல் ஆவணம் வைத்திருக்கிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின், மிசா சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை அவர் வைத்திருக்கிறாரா? இதுவரைக்கும் அனைத்து ஆவணங்களையும் காட்டுகிறார்கள், ஆனால் தடுப்புகாவலில் வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை இதுவரைக்கும் காட்டவில்லை. ஒருவர் கைதாகி இருந்தால் தடுப்புக்காவல் ஆவணத்தை காட்ட வேண்டும். அந்த ஆவணம் இல்லாத ஒரே தியாகி இவராகத் தான் இருப்பார்.

அதனால் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேறு ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டா என்பது 30, 40 வருட சர்ச்சை. இதுவரைக்கும் அவர்களால் தடுப்புக்காவல் ஆவணத்தை கூட கொடுக்க முடியவில்லை. திரும்ப திரும்ப இதை பெரிதாக்கி பேசுவதால் பிரயோஜனம் இல்லை. கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் 50 கோடி, 100 கோடி செலவு செய்தார்கள், ஆனால் மக்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள் என்று தெரியும். அதே தான் இந்த இடைத்தேர்தலிலும் நடக்கும். திமுகவும் அதிமுகவும் கொடுக்கிற பணத்தை வாங்கிவிட்டு என்ன செய்ய வேண்டுமென்று மக்களுக்கு தெரியும். இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட வராது” என்று பேசினார். 

Source link