சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்தநிலையில், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவும் ஆகும் என்பதால், புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும் என்று திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்து வருவதால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆதரவுடன் தவெக தலைமையிலான கூட்டணி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியில் தேர்தலின் கடைசி நேரத்தில் இடதுசாரிக் கட்சியினர் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன், மிசா சட்டம் அமலில் இருந்தபோது முதலில் கைது செய்யப்பட்டதும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டதும் வைகோதான், அப்போது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது நேரடி அரசியல் காரணத்துக்காக அல்ல.
மேலும், முதல்வர் விஜய் உடல்மொழி குறித்துத் தனிப்பட்ட நபர் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், தன்னைப் பார்த்துதான் பேசியதாகச் சிலர் அனுதாபத்தைத் தேடுவது போன்று தெரிகிறது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு மதிமுகதான் காரணம். இந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி கடந்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தினேன். இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவும் ஆகும், புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும். இந்திய நாட்டின் நிர்வாகத் தலைநகராக டெல்லியும், நிதித் தலைநகராக மும்பையும் செயல்படுவது போல, தமிழ்நாட்டிலும் சென்னையை நிதித் தலைநகராகவும், திருச்சியை நிர்வாகத் தலைநகராகவும் மாற்ற வேண்டும். தலைமைச் செயலகம் (Secretariat) உள்ளிட்ட முக்கிய நிர்வாக அலுவலகங்களைத் திருச்சிக்கு மாற்றுவது இதற்கான சரியான தொடக்கமாக இருக்கும்.
தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளதால், கன்னியாகுமரி முதல் கொங்கு மண்டலம் வரை மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பொதுமக்கள் 3 முதல் 3.5 மணி நேரத்திற்குள் எளிதாகத் திருச்சியை வந்தடைய முடியும். இது சாமானிய மக்களின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் தேவைகளை விரைவாகத் தீர்க்க உதவும். மேலும், இத்திட்டம் திருச்சிக்கு மட்டுமல்லாது, சுற்றியுள்ள மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சமச்சீரான மேம்பட்டிற்கும் பெருமளவில் வழிவகுக்கும் என்பதால், முதலமைச்சர் இக்கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
