தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தான்குளம் மற்றும் குதிரைமொழி தேரிக்காடுகள் பகுதிகள், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிய நிலப்பரப்பாகும்.
பலவகையான தாவரங்கள் மற்றும் அரிய விலினங்களின் வாழ்விடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. காப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய நரிகள், அலங்குகள், முள்ளெலிகள், பல்லிகள் மற்றும் பல்வேறு வகையான வலசைப் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களின் முக்கிய அடைக்கலமாக இந்தத் தேரிக்காடுகள் திகழ்கின்றன.
மேலும், இப்பகுதியிலுள்ள தேரிக்காடுகள் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நிலத்தடி நீருக்கு மிக முக்கிய ஆதாரமாகவும் விளங்குகின்றன.
இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்தச் சரணாலயத்தைப் பாதுகாக்க சூழலியல் உணர்திறன் மண்டலம் (ESZ) அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுக்கும் திட்டங்களை கனிமவளத்துறை முன்னெடுத்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேரிக்காடுகளில் தாது மணல் மற்றும் அரிய கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான திட்டங்களை தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருவதைக் கண்டித்துள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி, இதுவொரு கொடிய திட்டம் என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகவும், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இருப்பவை குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் தேரிக்காடுகள்.
இத்தகைய தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுப்பதற்கான கொடிய திட்டங்களையும் தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் அரிய வகை நிலப்பரப்பாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சூழலியல் பகுதிகளாகவும் விளங்கும் இந்தத் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.” என்று கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
