ஆந்திர மாநிலத்தில் கிணறு மற்றும் குழாய்களில் சூடான வெந்நீர் வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, சாதாரணமாகப் பயன்படுத்தும் குடிநீரைக் கூட ஆரவைத்துக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர பயன்பாட்டிற்குக் கூட அந்த நீரை உடனடியாக பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள மாணு குரு, பாகிடேறு, கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் உள்ள கிணறுகள், கால்வாய்கள், ஆழ்துளைக்கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் ஆவி பறக்க மிக அதிக வெப்பத்துடன் சூடான நீராகப் பாய்கிறது. கொதிக்கக் கொதிக்க வரும் இந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இயற்கையாகவே குழாய்கள் மற்றும் கிணறுகளிலிருந்து சூடான தண்ணீர் வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக மழை மற்றும் பனிக்காலங்களில் கிணறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள நீரானது மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும். ஆனால், இந்த பகுதியில் இயற்கைக்கு மாறாக, மழை பெய்து முடித்த உடன் சூடான நீர் வருகிறது. இந்நிலையில், மழை பெய்து முடித்த பின்பு பெண் ஒருவர் அருகில் உள்ள கிணற்றில் இருந்து வெந்நீர் பிடித்துச் செல்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் வியப்புடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமங்களின் நிலப்பகுதிகளுக்கு அடிப்பகுதியில் நிலக்கரி இருப்பதாகவும் அதனால் தான், நீர்நிலைகளில் உள்ள நீர் சூடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
