தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவை போற்றும் வகையில், அவர் வசித்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) நாகராஜன் இன்று (செப்.12) அறிவித்துள்ளார்.
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90) நேற்று காலமானார். அவருக்கு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.”அன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே..” என தமிழ் சமூகத்தை தனது பிரத்யேக குரல் மூலம் கட்டிப்போட்டு வந்த பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா (வயது 90) இன்று நம்முடன் இல்லை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் – பாக்கியம் தம்பதியருக்கு 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தவர் சாலமன் பாப்பையா. 12 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் 9-வது குழந்தையாக பிறந்த இவர், வறுமையான குடும்பச் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை நெசவுத் தொழிலிலும், பின்னர் மதுரா கோட்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றினார்.மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், அமெரிக்கன் கல்லூரியிலேயே சேர்ந்து பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.இவரது நகைச்சுவையான பேச்சு மற்றும் தமிழ் புலமை காரணமாக பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக இருந்துள்ளார்.இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் மதுரை அரசடி பகுதியில் வசித்து வந்தார்.
