“அன்பால் தான் விஜய் முதல்வரானார்” – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இதில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், சஞ்சனா நமீதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் நாகராஜ் பேசியதாவது, “மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி, நான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான் பல படங்கள் செய்திருக்கலாம், நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். டிரைலரைப் பார்த்தவுடனேயே அவர் படத்தின் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு நிச்சயமாக ரசிப்பீர்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

Source link