விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இ.டபிள்யூ.எஸ் (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு) விவகாரம் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. அவர் பேசியது முற்றிலும் தவறு என்றும், அத்தகைய வாதத்தை ஏற்கவே முடியாது என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதோ அல்லது த.வெ.க.-வுடன் (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அமைப்பதோ வி.சி.க.வின் அரசியல் முடிவு மற்றும் அவர்களின் விருப்பம் சார்ந்தது. த.வெ.க உடனான கூட்டணி என்பது தவறான முடிவு என்ற நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும், அது தனிப்பட்ட அரசியல் விவகாரம். ஆனால், அது குறித்துப் பேசும் போது திருமாவளவன் முன்வைத்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
இ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீட்டைச் சமூக நீதி என்று பா.ஜ.க சொல்லும்; அதனால் பா.ஜ.க எதிர்ப்பை ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்று கூற வேண்டும்” எனத் திருமாவளவன் அளித்த விளக்கத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க இயலாது என்ற வாதம் எழுந்துள்ளது. பா.ஜ.க EWS-ஐ சமூக நீதி என்று சொன்னால், அது அபத்தம்; உண்மையில் அது சமூக அநீதி என்றுதான் நாம் கூற வேண்டுமே தவிர, அதுவும் ஒரு கோணத்தில் சமூக நீதியாகப் பார்க்கப்படலாம் என அனுமதிப்பது மிக மிகத் தவறான வாதமாகும்.
பாஜக நீண்ட காலமாகவே தாங்கள்தான் உண்மையான மதச்சார்பின்மை பேசுவதாகக் கூறி வருகிறது. பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) என்பது அவர்களது முழக்கமாக உள்ளதுடன், சிறுபான்மையினரின் தனிநபர் சட்டங்களை இந்து பெரும்பான்மையுடன் இணைப்பதே மதச்சார்பின்மை என அவர்கள் கூறி நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். அப்படியானால், மதச்சார்பின்மை என்ற சொல்லாக்கமும் பாஜக எதிர்ப்பிற்கு முழுமையாக உதவாது என்று ஆகிவிடுமா? பாஜகவின் வரையறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதனுடன் முரண்பட வேண்டுமா அல்லது அவர்களது வரையறைகளையே திட்டவட்டமாக மறுத்து எதிர்க்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இ.டபிள்யூ.எஸ் போல சமூக நீதி என்ற கருத்தாக்கத்தையே குழிதோண்டிப் புதைக்கும் ஒரு சட்டம் இருக்க முடியுமா? அதைப்போய் ‘அதுவும் ஒரு சமூக நீதி’ என்று நாமே கூற முடியுமா? திருமாவளவன் வாய் தவறியோ அல்லது எப்படியோ அதனை ஆமோதிப்பது போலத்தான் பேசியுள்ளார். இதற்குப் போய் ஆதரவாக விளக்கங்கள் கொடுப்பது அதைவிடப் பெரும் தவறாக அமையும். எனவே, அவர் தான் கூறிய விளக்கத்தைத் திரும்பப் பெறுவதே சரியானது; இது வெறும் தேர்தல் கூட்டணிப் பிரச்சனை மட்டுமல்ல, அதையும் தாண்டிய தத்துவப் பிரச்சனை என்று குறிப்பிடப்படுகிறது.
உயர்சாதி இந்துக்களுக்கு பாஜக அரசு வழங்கிய 10% இ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீட்டைச் ‘சமூக நீதி’ எனத் திருமாவளவன் பேசியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ.டபிள்யூ.எஸ் 10% சமூக நீதிதான், பாஜக சமூக நீதி பேசுகிறது, சாதியவாதிகள் சமூக நீதி பேசுகிறார்கள் என்று திருமா பேசியிருப்பது கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாட்டுத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரப் பசிக்காகவும், அமைச்சரவைப் பதவி ஆசைக்காகவும் கொள்கைகளை அடகு வைக்கும் இவரது உண்மையான முகத்திரை இப்போது கிழிந்து தொங்குவதாகவும், இவரைப் போலக் கொள்கைவாதி யாருமில்லை, இவர் அரசியலின் ஆசான் என்று இத்தனை காலம் கட்டப்பட்ட பிம்பங்கள் அனைத்தும் வெறும் பொய்யும் பித்தலாட்டமும்தானா என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு தேர்தல் கூட்டணியும், அதிகார ஆசையும் இவரது உண்மையான நிறத்தை வெளிச்சம்பாட்டுக் காட்டிவிட்டதாகக் காரசாரமான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
