ஹைதராபாத்: நடிகை சமந்தா, நடிகர்கள் மகேஷ்பாபு, வெங்கடேஷ் டகுபதி, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் ராஜ மவுலி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்விவிஎஸ் லட்சுமணன் உள்பட பல பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ‘SIR’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. தற்போது வரைவு வாக்காளர் பட்டியல்கடந்தஆகஸ்ட் 17 ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் ஹைதராபாத்தில் மட்டும் 19 லட்சத்து 41 ஆயிரத்து 444 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் என்றால் மொத்தம் 73 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை பார்த்து பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை செப்டம்பர் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அக்டோபர் 19ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் தெலுங்கானாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள் தவறான தகவல்களுடன் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எழுத்து பிழைகள், பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் உள்ளிட்டவை உள்ளதால் அதுபற்றி விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ‘சார்’ பணிகளை மேற்கொள்வோர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடிகை சமந்தா, நடிகர்களான வெங்கடேஷ் டகுபதி, மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் ராஜமவுலி, மகேஷ் பாபு மனைவி நம்ராதா, விஜய் தேவரகொண்டாவின் சகோதார் ஆனந்த் தேவரகொண்டா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவால், புல்லேலா கோபிசந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் உள்ளிட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தெலுங்கானாவில் ‘சார்’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பணி முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. இருப்பினும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்தேகம், முரண்பாடு உள்ளவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
