சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், ஸ்டாலினை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சனிக் கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் காதர்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் காதிர்வன் உள்ளிட்ட பலரும், திமுக மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் பவுசியா பானுவும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களை எழுப்பிய திமுக மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் பவுசியா பானு, “இல்லம் தேடி கல்வியைக் கொண்டு வந்தவர் முதல்வர்… இன்று இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்” எனத் தவறுதலாகக் கோஷம் எழுப்பினார்.
இதைக் கேட்டு அருகில் இருந்த திமுகவினர் மற்றும் மாவட்டச் செயலாளர் காதர்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண் நிர்வாகி, “இல்லம் தேடி கல்வியைக் கொண்டு வந்தவர் முதல்வர்… இன்று இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் விஜய்” என மாற்றி கோஷமிட்டார். இந்தச் சம்பவம் அங்கு சிறிது நேரம் சிரிப்பலையையும், திமுகவினர் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
