பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாடு, ஓட்டல் அருணில் அமைந்துள்ள தோழர் மனோகரன் நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிளைத் தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கிய இந்த மாநாட்டிற்கு, மூத்த தோழர் கண்ணையன் கொடியேற்றினார். துணைத் தலைவர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்த, கிளை துணைச் செயலாளர் எஸ்.கே.செல்வராசு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மண்டலச் செயலாளர் பஷீர் துவக்க உரையாற்ற, கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் சிவஞானம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

திருச்சி மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிராஜுதீன் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெருநகர் வட்டச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முக்கியமான தீர்மானங்கள்

மாநாட்டில் மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ். (CPS) தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் மற்றும் 2003 ஏப்ரல் 1-க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும், 8-வது ஊதியக் குழுவில் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை சங்க நிர்வாகிகளான நடராஜன், சந்திரன் மற்றும் அன்னக்கிளி ஆகியோர் முன்மொழிந்து பேசினர்.

மாநாட்டின் நிறைவில் புதிய நிர்வாகிகளாக தலைவராக எஸ்.கே.செல்வராசு, செயலாளராக எம். பன்னீர்செல்வம், பொருளாளராக எஸ். சிவஞானம் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உட்பட 11 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. டி.என்.இ.பி.டபிள்யு.ஓ. (TNEBWO) மாநிலத் துணைத் தலைவர் தீரமணி நிறைவுரையாற்ற, கிளை துணைச் செயலாளர் தேவராஜ் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுபெற்றது.

க.சண்முகவடிவேல்

Source link