“மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை கதை சொன்னார்”

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இதில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், சஞ்சனா நமீதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் சசி பேசுகையில், “என்னுடைய நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு நண்பனாக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களை நான் நிறைய கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் நிச்சயம் மக்களைச் சென்றடையும். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் ஒரு கதையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படி கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து, அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சில இயக்குநர்கள் தப்பாக படங்களை எடுக்கவே மாட்டார்கள். அப்படி தவறான படமே எடுக்க முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். சில படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும். ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்தான் நாகராஜ். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பாருங்கள். நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.

Source link