பா.ம.க கட்சி மற்றும் வன்னியர் சமூகத்தின் மீது அவதூறு பரப்பும வகையில் பேசிய எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்த மிருதுளா என்பவரை கைது செய்யக்கோரி பாட்டாளி மாணவர் அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் அமைப்பின் (எஸ்.எஃப்.ஐ) மாநிலத் தலைவர் மிருதுளா, செவ்வாய்க்கிழமை (08.09.2026) நடைபெற்ற தலித் பெண்கள் மாநாடு குறித்து ‘லெஃப்ட் லேன்’ (Left Lane) தமிழ் ஊடகத்திற்கு அளித்த காணொளியில், சட்டமன்றத்தில் எல்லாரும் பாராட்டக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினராக யார் இருக்கிறார்கள் என்றால் சவுமியா அன்புமணி. அவர் நன்றாக பேசுகிறாரா என்றால் அதில் எல்லாம் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால், இங்கே ஒரு தனிப்பட்ட நபரை முன்னிறுத்துவதற்கான காரணம் பா.ம.க-வுடைய வரலாற்றை இன்றைக்கு மறைக்கப் பார்க்கிறார்கள். இளவரசன் திவ்யா படுகொலையில், யார் இளவரசனை கொலை செய்தது. அந்த படுகொலைக்கு பின்னாடி எந்த கட்சி இருந்தது என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தான். ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை சார்ந்தவர்கள் தான் அந்த சாதியை சார்ந்தவர்களுக்காக தான் அந்த கட்சி நடத்துகிறார்கள்.
அவர்கள் கட்சி நடத்துவதன் நோக்கமே சாதியாக மக்களை அணி திரட்டுவது தான் நோக்கம். இன்றைக்கு சவுமியா அன்புமணி பிம்பத்தை காட்டி காட்டி அந்த கட்சி செய்த அவ்வளவு கொலைகளையும் இன்றைக்கு நியாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த வரலாறு எல்லாம் இப்போது இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது இருக்கிறது.
அவர்கள் சட்டமன்றத்தில் ரொம்ப பாவமாக என்ன பேசுகிறார்கள் என்றால், பெண்கள் கிராமப்புறங்களில் வெறும் மஞ்ச தாலி தான் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று கருணை உள்ளத்தோடு தாய் உள்ளத்தோடு பேசுகிறார்கள். ஆனால், தலித் பெண்கள் போட்டிருக்கக் கூடிய அந்த மஞ்ச தாலியைக்கூட விட்டு வைக்காமல் தாலியறுத்த கட்சி தான் பா.ம.க கட்சி என்ற ஒரு விஷயத்தை மக்களிடம் பேச வேண்டியது இருக்கிறது.
ஏனென்றால், அதற்கு பின்னால் அவ்வளவு இளைஞர்களுடைய கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது, அத்தனை பேர் தங்களுடைய குழந்தைகளை இழந்து விட்டு இந்த சாதியினால் வந்து நின்று இருக்கிறார்கள். எனவே, இதற்கெல்லாம் பின்புலமாக இருந்த ஒரு கட்சி தான் பா.ம.க என்பதையும் இன்றைக்கு இளைஞர்களிடம் கொண்டு போக வேண்டியது இருக்கிறது. தனிப்பட்ட நபர்கள் என்பது என்றைக்குமே கிடையாது, அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஐடியாலஜி (சித்தாந்தம்) என்னவோ அதுதான் பேசும்.
எனவே ஒருத்தர் தேன் ஒழுக பேசுகிறார்கள், இனிக்க இனிக்க பேசுகிறார்கள் என்பது மட்டும் கிடையாது அதற்கு பின்னாடி ரத்தமும் சதையுமாக வரலாறுகளை எடுத்துச் சொல்ல முடியும் என்பதை பொது மக்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கிறது” என்று பேசியிருந்தார். மிருதுளாவின் இந்த பேச்சு, பா.ம.க-வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இது குறித்து பாட்டாளி மாணவர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கடலூர் மணி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், பா.ம.க மீதும் வன்னியர் சமூகத்தின் மீதும் அவதூறு பரப்புகின்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான எஸ்.எப்.ஐ (SFI)-யைச் சேர்ந்த மிருதுளாவை கைது செய்யக்கோரி,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் மாநில மாணவர் சங்க செயலாளர் ஞான.விஷ்ணு அவர்களின் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
46-ஆண்டுகளாக சமூக நீதிக்காக களமாடி வருகின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும், பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தின் மீதும், தமிழக சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமை குரலாய் ஒலித்து, தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் தனது சிறப்பான பேச்சாலும் செயல்பாடுகளாலும் சிறப்பான வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள,பாமக சட்டமன்ற குழு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ அவர்களின் மீதும் வக்கிர புத்தியோடு,கலவரத்தை தூண்டுகின்ற வகையில் மிகவும் தரம் தாழ்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கடும் சொற்களையும் பயன்படுத்தி, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான முழுமையான காரணமாக இருக்கிற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா-வின் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்திட வேண்டுமாய் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாநில மாணவர் சங்க துணை தலைவர் அண்ணன் செல்வ.மணிகண்டன் அவர்கள், கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ஸ்ரீராமச்சந்திரன் அவர்கள், கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர்கள் ச.அருள்செல்வம் அவர்கள்,ஹரிஷ்,பிரகாஷ் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் என்று பதிவிடப்பட்டுள்ளது.
