– சிறப்பு நிருபர் –
”சர்வதேச முடிவெடுக்கும் அமைப்புகளில், ‘குளோபல் சவுத்’ எனப்படும் உலகின் தென் பகுதியைச்சேர்ந்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. சர்வதேச விதிகளை பின்பற்றுபவர்களாக மட்டும் இல்லாமல், அவற்றை உருவாக்குபவர்களாக, வழிநடத்துபவர்களாக நாம் மாற வேண்டும். இதற்கான முன்னெடுப்புக்கு நாங்கள் தயார்,” என, ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப் ரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ‘பிரிக்ஸ்’ எனப்படுகிறது. கடந்த 2024ல், இந்த அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியோ, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் ஆகிய ஆறு நாடுகள் இணைந்தன.
இந்த கூட்டமைப்பின் 18வது இரண்டு நாள் உச்சி மாநாடு, தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது.

இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை முன்னெடுப்பதற்கான முக்கிய தளமாக பிரிக்ஸ் உருவெடுத்துள்ளது.
உலக மக்கள் தொகையில், 40 சதவீதத்தை இந்த கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம் நாடு தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், மக்கள் நலன் மற்றும் மனிதநேயத்தை மையமாக வைத்து, பின்னடைவை சமாளிக்கும் திறன், புதுமை, ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உலகளாவிய முக்கிய அமைப்புகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளை நம் நாடு முன்வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த பிரிக்ஸ் மாநாட்டிற்குள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாக சீர்திருத்தத்துக்கான, 10 அம்ச திட்டத்தை உருவாக்க பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் , பிரதமர் மோடி பேசியதாவது:
குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகள், பிறர் உருவாக்கிய விதிகளை பின்பற்றுபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. விதிகளை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் வாயிலாக, இந்த வளர்ந்து வரும் நாடுகளின் இளம் துாதர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு பேச்சு நடத்தும் திறன், நடைமுறை பயிற்சி மற்றும் சட்ட அறிவை வழங்க முடியும்.
இன்று, உலகளவில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை எதிர்கொள்ளும் முன்வரிசையில், குளோபல் சவுத் நாடுகள் உள்ளன. ஆனால், அந்த நெருக்கடிகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் இடத்தில், நாம் பின்வரிசையில் இருக்கிறோம். இதை, சிறப்புரிமை அடிப்படையிலான, மேல் கீழ் படிநிலைகளில் உள்ள நாடுகளின் ஒத்துழைப்புக்கான தளமாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாட்டின் குரலும் உலகெங்கும் பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் பங்களிப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியின் மையமாக, மனிதகுலத்தின் வளர்ச்சியே இருக்க வேண்டும். உலக அமைப்புகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதற்கான, 10 அம்சங்களை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும். அடுத்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குள், இந்த 10 அம்சங்களையும், ‘பிரிக்ஸ் சீர்திருத்த செயல்திட்டம்’ என்ற பெயரில் உருவாக்க முயற்சி செய்யலாம்.
இந்த செயல்திட்டத்தை உருவாக்கும் போது, பிரதிநிதித்துவம், செயல்பாட்டுக்கான பொறுப்பு, விதிகளை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்தியாவில் நடந்த இந்த மாநாடு, உலகுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்க வேண்டும். எதிர்காலம் அனைவருக்கும் பொதுவானது என்றால், அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமையும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
இங்கு ஒருவருடைய கருத்தை மற்றொருவர் மதித்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னேறுகிறோம். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையுடன் முன்னேறுவதே நம் நோக்கம். குளோபல் சவுத் நாடுகள், பிறர் வகுத்த விதிகளை ஏற்பவர்களாக மட்டும் இல்லாமல், உலகளாவிய விதிகளை உருவாக்கி வழிநடத்துபவர்களாகவும் மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
