புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து, சமீபத்தில் இந்த மாவட்ட கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், எம்.பி., — எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
‘என் தொகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன’ என, புகார் கூறிய ராகுல், இது தொடர்பான ஒரு வீடியோவை கலெக்டருக்கு காட்டினார். அதை பார்த்த கலெக்டர், ‘இது இந்த தொகுதி சாலை அல்ல’ என, பதில் அளிக்க, ராகுல் கோபப்பட்டார்.
உடனே, ராகுல் வேறொரு விஷயத்தை ஆரம்பித்தார். ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கோஷத்துடன், சிசு கொலையை தடுக்க புதிய திட்டத்தை ஹரியானாவில், 2015 ஜனவரியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இத்திட்டம் உ.பி.,யில் சரிவர செயல்படவில்லை’ என, அவர் குற்றஞ்சாட்டினார்.
‘நான் ஒரு பெண். போராடுவேன் என, உ.பி.,யில் சவால் விட்ட உங்கள் சகோதரி பிரியங்கா எங்கே? ஏன் கேரளாவுக்கு ஓடி விட்டார்?’ என, கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., – எம்.எல்.ஏ., கேள்வி கேட்க, ஆலோசனை கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.
‘ராகுல் ஒரு கோபக்கார இளைஞர். இவர் செய்வது அனைத்தும் நாடகம். இவருக்கு உதவி செய்ய ஒரு பெண்ணும், ஒரு இளைஞரும் உள்ளனர். அவர்கள் என்ன எழுதி தருகின்றனரோ, அதை அப்படியே படிக்கிறார் ராகுல். அதில் என்ன எழுதி உள்ளது என்பதை அவர் புரிந்து படிப்பதில்லை’ என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இதே குற்றச்சாட்டை தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் கூறின. இப்போது, ராகுலும் துண்டுச் சீட்டைப் பார்த்து தான் படிக்கிறார் போலிருக்கிறது.
