சென்னை: ”தேசியம் எனும் கொள்கையில், ‘தினமலர்’ நாளிதழ் வலுவாக பயணிக்கிறது,” என, பா.ஜ., தமிழக செயலர் அஸ்வத்தாமன் பேசினார்.
‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பில், அஸ்வத்தாமன் பேசியதாவது:
தமிழ் பத்திரிகை துறையில், இன்றும் தேசியம் என்ற பாதையில் பயணிக்கும் ஒரே நாளிதழ், ‘தினமலர்’ தான். தேசத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் குறித்த செய்திகளில், ‘தினமலர்’ என்றைக்கும் சமரசம் செய்து கொண்டது கிடையாது.
தேசியம் என்ற பாதையில், ஒரு அங்குலம் கூட வழுவாமல் பயணிக்கும் பத்திரிகையாக உள்ளது. காங்., தமிழக துணை தலைவர் கோபண்ணா பேசும்போது, ‘ஒரு காலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது; பிறகு, பா.ஜ.,வை ஆதரிக்கத் தொடங்கி விட்டது. தேசியம் என்ற பாதையில் இருந்து வழுவி விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது’ என்றார்.
தேசியம் என்ற பாதையிலிருந்து வழுவியதே, காங்கிரஸ் கட்சிதான். தேசியம் பேசுபவர்கள் அனைவரும், பா.ஜ.,வுடன் தொடர்புபடுத்தப்படுகின்றனர் என்றால், தேசியம் என்ற பாதையில் பா.ஜ., மிகவும் வலுவாக பயணிக்கிறது என்பதே காரணம். தினமலர் நாளிதழும், தேசியம் என்ற தன்னுடைய கொள்கையில் வலுவாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தேசம் முழுதும் கிளைகள் இருப்பதால், ஒரு கட்சி தேசிய கட்சியாக மாற முடியாது; தேசியம் என்பது கொள்கையில் இருந்தால் மட்டுமே, தேசிய கட்சியாக இருக்க முடியும். அதனால்தான் பா.ஜ., தேசியக் கட்சியாக இருக்கிறது.
‘தினமலர்’ நாளிதழ், ஒரு சார்புடையதாக இருக்கிறதா, ஏதாவது அரசியல் சார்புடையதாக இருக்கிறதா என்று சொன்னாலே, அது பா.ஜ., சார்புடையதாக இருக்கிறதா என்ற ஒரு கேள்வியும், விமர்சனமும் வைக்கப்படுகிறது.
ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்தவராக நான் ஒன்றை சொல்கிறேன்… எங்களுக்கு பல தர்மசங்கடங்களை அளித்த ஒரு பத்திரிகை, தமிழகத்தில் இருக்கிறது என்றால், அது ‘தினமலர்’ தான். தினமலர் நாளிதழில் செய்தி வந்தால்தான் எங்களுக்கு பெரிய குடைச்சல்.
‘தினமலரிலேயே செய்தி வந்துருச்சி… எப்படி?’ என்று கட்சியில் கேட்பர். பா.ஜ., ஆதரவான பத்திரிகை என்று, ஒரு பார்வை வைக்கப்பட்டாலும், ‘தினமலர்’ இன்றும் தேசிய பாதையில் பயணிக்கிறது என்று அர்த்தம்.
வாசகர்கள் எதை படிக்கின்றனரோ, அதை மட்டும் கொடுக்காமல், வாசகர்கள் எதை படிக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும். அதை ‘தினமலர்’ நாளிதழ் செய்கிறது. மேலும், விளம்பரத்திற்காக செய்தி என்பதை, ‘தினமலர்’ யோசித்தது கிடையாது.
தற்போது, செயற்கை நுண்ணறிவு எனும், ஏ.ஐ., வளர்ச்சி அடைந்து வருகிறது. ‘தினமலர்’ தங்களுக்கென, ஒரு ஏ.ஐ.,யை உருவாக்க வேண்டும். 75 ஆண்டுகால பத்திரிகைகளை பதிவு செய்து, அதை மொபைல் போன் செயலியாக மாற்றி செயல்படுத்த வேண்டும். அப்போது தான், தற்போதைய செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
