நெல் வயலை விற்று சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்: வழக்கறிஞர் சுமதி பெருமிதம்

சென்னை: ”நெல் வயலை விற்று, சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்,” என, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி பேசினார்.

‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பிலான அரசியல் அரங்கத்தை, உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பேச்சாளருமான சுமதி ஒருங்கிணைத்து நடத்தினார்.

அவர் பேசியதாவது:

‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், இந்த பத்திரிகையை தொடங்குவதற்காக, ஒரே நாளில் தன்னுடைய அத்தனை விவசாய நிலங்களையும் விற்பனை செய்துள்ளார்.

நெல் வயல்களை விற்று, சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர். நெல் வயல்கள் மூணு போகம் விளைவிக்கும்; ஆனால், நாள்தோறும் ஒரு போகத்தை விளைவிக்கக் கூடிய அளவிற்கு, ஒரு பத்திரிகை, 75 ஆண்டுகளாக நம்மிடம் வலம் வருகிறது.

இத்தனை ஆண்டுகள் ஒரு பத்திரிகை நிற்கிறது என்றால், அதற்கு பின்னால் கடுமையான உழைப்பும் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக, ஒரு தகப்பன் கண்ட கனவை எடுத்து செல்கின்றனர். இதற்காக, தினமலர் குடும்பத்திற்கு வாழ்த்துகள்.

தினமலர் நாளிதழுக்கு கட்சி சார்பு இருக்கா, இல்லையா என்பதில் கேள்வி இல்லை. ஒரு செய்தி வரும்போது, அந்த செய்தியில், அவர்கள் என்ன சார்பு எடுக்கின்றனர் என்பதுதான் முக்கியம்.

அதில் கட்சி சார்பை, அவர்கள் ஒரு நாளும் எடுத்ததில்லை.

ஒரு செய்தியில், தினமலர் எடுத்திருக்கும் நிலைப்பாடு, அந்த காலக்கட்டத்தில் யாருக்கு உடன்பாடு இல்லையோ, அந்த கட்சிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.

‘திருவிதாங்கூர் தமிழர்களின் நன்மைக்காக பாடுபட வேண்டியது, நம் தலையாய கடமை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

‘ தமிழினத்திற்கு துரோகம் செய்யும் கோடாரி காம்புகள் எமது விரோதிகள்’ என, தினமலர் நாளிதழின் முதல் தலையங்கத்திலேயே, இந்த பத்திரிகை எதற்கானது என்பதை, டி.வி.ராமசுப்பையர் தெரிவித்து விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link