புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், அவர் பயணம் செய்யும் ‘டூம்ஸ்டே விமானம்’ மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது.
ரஷ்ய அதிபர் ‘இல்யூஷின் ஐஎல்-96-300பியூ’ என்கிற பிரத்யேக விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். இந்த விமானத்தில்தான் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்துள்ளார். இது ‘பறக்கும் கிரெம்ளின்’ அல்லது ‘டூம்ஸ்டே விமானம்’ என்று சர்வதேச ஊடகங்களால் அழைக்கப்படுகிறது.
1980-களில் இல்யூஷின் விமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானம், ரஷ்ய அதிபருக்கான மிகவும் பாதுகாப்பான கட்டளை மையமாகச் செயல்படுகிறது. நீண்ட தூரம் பறக்கக்கூடிய, 4 இன்ஜின்கள் கொண்ட இந்த ரஷ்ய விமானம், மிக மோசமான சூழ்நிலைகளின்போது உயர்மட்டத் தலைவர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரே நேரத்தில் சுமார் 11,000 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது, இதனால் நீண்ட பயணங்களின்போது பலமுறை எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை இருக்காது.
இந்த விமானம் 55.35 மீட்டர் நீளமும், 60.12 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. இது, அதிபரின் அனைத்து பயணங்களையும் கையாளும் ரஷ்யாவின் சிறப்பு விமானப் படையால் இயக்கப்படுகிறது. ஐஎல்-96-300பியூ விமானம் தேசிய அவசர காலங்களில் ஒரு முழுமையான நடமாடும் கட்டளை மையமாக செயல்படக்கூடியது.
இது, உலகின் எந்த மூலையிலிருந்தும் ராணுவம், உளவுத்துறை மற்றும் அரசாங்க வலையமைப்புகளை பாதுகாப்பாக தொடர்பு கொள்ளக்கூடிய மறைமுக தகவல் தொடர்பு அமைப்புகளை கொண்டுள்ளது.
பாதுகாப்பையும் தாண்டி, இந்த ‘டூம்ஸ்டே’ விமானம் ஆடம்பரத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படுக்கையறைகள், ஆடம்பரமான குளியலறைகள், ஒரு தனிப்பட்ட சமையலறை மற்றும் உணவருந்தும் பகுதி உள்ளது.
மேலும் நிர்வாகக் குழு இருக்கைகளுடன் கூடிய ஒரு பெரிய மாநாட்டு அறையைக் கொண்ட ஒரு பிரத்யேக அதிபர் அறையும் உள்ளது. மேலும், இந்த விமானத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள், நேர்த்தியான மர வேலைப்பாடுகள், மற்றும் உயர்தர தோல் மற்றும் இருக்கை உறைகள் போன்ற பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரே மாதிரியான 2 விமானங்கள்
புதினின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது. அவரது இந்திய பயணத்துக்கு ஒரே மாதிரியான இரண்டு ‘இல்யூஷின் ஐஎல்-96-300பியூ’ விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று ஒரு போலியான விமானம் ஆகும்.
புதின் எந்த விமானத்தில் ஏறியுள்ளார் என்பதை யாரும் அறியாதவாறு, இரு விமானங்களும் ஒரே நேரத்தில் பறந்தன. இந்த இரட்டைப் பாதுகாப்பு உத்தி மாஸ்கோவுக்குப் புதியதல்ல. கூடுதல் பாதுகாப்புக்காக புதின் இந்த முறையில் மற்ற நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார்.
