லண்டன்: தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த லண்டன் சில்வர் ஸ்டோன், மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான மோட்டார் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் ரேஸ் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது. இந்த கார் ரேஸை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு கடந்த 10 ஆம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நேற்று இரவு நடைபெற்ற ‘சில்வர்ஸ்டோன் ரவுண்ட்’ பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரமும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இந்தப் போட்டியில் களம் இறங்கினர்.
அவர்களை உற்சாகப்படுத்தினார் முதலமைச்சர் விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சர்வதேச விளையாட்டு மேடையில் ஒரே புள்ளியில் இணைந்துள்ள ரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்களிடையேயும், விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அவர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அஜித்தின் கார் மீது அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்தார். பின், அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்.
கார் ரேஸ் நடைபெறும் தளத்திற்கு நடிகை த்ரிஷா நேரில் சென்றுள்ளார். அஜித்தின் அழைப்பின் பேரில் திரிஷா அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திடீரென அந்த இடத்துக்கு என்ட்ரி கொடுத்து, ரேஸை பார்த்து நடிகை திரிஷா கண்டுகளித்தார்.
நேற்று இரவு 9:30 மணி அளவில் தொடங்கிய கார் ரேஸ் இரவு 11:47 மணிக்கு நிறைவடைந்தது. 50 லேப்கள் கொண்ட இந்த போட்டியில் ஏஎன்எஸ் மோட்டார் ஸ்போர்ட் அணி முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை ஆர்எஸ்ஜிபி அணி பிடித்தது. மூன்றாவது இடத்தை டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய அஜித் அணி பிடித்தது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் அஜித் குமாரின் அணி 16 வது இடத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு முன்னேறி மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இதற்கிடையே ரேஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அஜித் கார் திடீரென விபத்துக்குள்ளானது. ட்ராக்கில் இருந்து விலகிப் பக்கவாட்டு பகுதிக்கு சென்ற நிலையில் உடனடியாக மீட்புக் குழுவினர் பணியில் இறங்கி காரை சீரமைத்தனர்.
