சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ததில், தி.மு.க.,வின் தலையீடு இருந்ததாக, ம.தி.மு.க., முதன்மை செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தொடர்ந்து, துரை வைகோவும் தி.மு.க., குறித்து மனம் திறந்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் துரை வைகோ அளித்த பேட்டி: தமிழகத்தில், எங்கு சென்றாலும், வி.சி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னை வரவேற்கின்றனர். ‘கடந்த சட்டசபை தேர்தலில், திருமாவளவன் போட்டியிட வேண்டும். அவர் சட்டசபைக்கு சென்றால் சிறப்பாக செயல்பட முடியும்’ என, வி.சி.க., நிர்வாகிகள் விரும்பினர்.
அதைத்தொடர்ந்தே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக, திருமாவளவன் அறிவித்தார். ஆனால், அதை தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. திருமாவளவனுக்கு நிர்பந்தத்தை உருவாக்கி, அவர் போட்டியிடும் வாய்ப்பை மறுத்து விட்டனர். சமூக நீதி, சமத்துவம் பேசும் தி.மு.க., தலைமை, இதுபோன்று நடந்து கொண்டது மிகப்பெரிய அநீதி.
100 சதவீதம்
சமீபத்தில், தி.மு.க., பற்றி திருமாவளவன் பேசியது, 100 சதவீதம் உண்மை. சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., என, கூட்டணி கட்சிகளிடம், தி.மு.க., தலைமை மோசமாக நடந்து கொண்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கிய நான்கு தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கட்டாயப்படுத்தினர்.
சட்ட ரீதியாக பிரச்னை வரும் என நாங்கள் கூறியதால், சீர்காழி தொகுதியில் மட்டும், தனி சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டனர். கடைசி நேரத்தில் அங்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்விலும் தி.மு.க.,வின் தலையீடு இருந்தது.
‘மிசா’ காலத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது உண்மை தான். அப்போது, அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும் கைது செய்யப்பட்டனர். அரசியல் காரணங்களுக்காக, ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்றால், அது 100 சதவீதம் உண்மை அல்ல.
முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, திருச்சியை இரண்டாவது தலைநகராக கொண்டு வர முயற்சித்தார்; ஆனால் நடக்கவில்லை. தலைநகரின் ஒரு பகுதியை திருச்சிக்கு மாற்றுவது, சென்னைக்கு மிகப்பெரிய பலம்.
திருச்சி இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் வளர்ச்சியை பெறும். தென் மாவட்ட மக்கள் வந்து செல்வதும் எளிதாகும். திருச்சியில் போதுமான நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் உள்ளன.
நல்ல முடிவு எடுப்பார்
சென்னை பட்டினப்பாக்கத்தில், போக்குவரத்து நெரிசல் உள்ளது. மீனவர் குடியிருப்புகள் மற்றும் இயற்கை வளங்களை பாதிக்கும் என்பதால், அங்கு தலைமைச் செயலகம் கட்ட, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பரந்துார் விமான நிலைய விவகாரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமும், நீர்நிலைகளும் பாதிக்கப்படாத வகையில், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்தார். அதேபோல், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் கட்டும் விஷயத்திலும், அவர் நல்ல முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தர்மபுரியில் நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் பேசிய வி.சி.க., தலைவர் திருமாவளவன், ‘சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேற, தி.மு.க.,வே காரணம். நல்லிணக்க நட்பை தக்க வைக்கும் ஆற்றல் தி.மு.க.,வுக்கு இல்லாததால், அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறின’ என, கடுமையாக தாக்கி பேசினார்.
அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோவும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்திருப்பது, தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
