சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூரில், குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை என்று மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். குடிநீர் கிடைக்காததால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 6 நாட்களாக தொகுதியில் குடிநீர் பிரச்சனை சரி செய்யப்படாமல் இருக்கிறது என்று கூறும் மக்கள், முதலமைச்சர் வெளிநாடு போவதற்கு முன்னர் எங்களுக்கான பிரச்சனையை சரி செய்திருக்கலாமே! என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
பெரம்பூரின் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் (பிளாக் 5,6 மற்றும் 7) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை குடிநீர் வாரிய (CMWSSB) அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, காலி குடங்களுடன் மீனாம்பாள் சாலை ஜங்ஷனில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடுங்கையூர் காவல்துறையினரும், பின்னர் அங்கு வந்த குடிநீர் வாரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர், புதுநகர் பகுதியிலும் போராட்டங்கள் வெடித்தன.
அங்குள்ள வட மத்திய குறுக்கு சாலையில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் திரண்டு தங்களுக்கு 6 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.கே.பி நகர் காவல்துறையினர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து மக்கள் கூறுகையில், தங்கள் பகுதிக்கு குடிநீர் வராதது குறித்து பலமுறை குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றும், தொலைபேசி மூலமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் வேறு வழியின்றி வீதியில் இறங்கி நாங்கள் போராடி வருகிறோம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
விஜய்யின் சொந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், குடிநீர் கூட சரியாக விநியோகிக்கப்படாமல் இருப்பது.. தொகுதியின் நிலவரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
