கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியது. ஆனால் நிர்வாகத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் ஊழலை ஒழிப்பேன் என முதல்வர் விஜய் சொன்னது அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஊழலை சாதாரணமாக எல்லாம் ஒழிக்க முடியாது என்று அதில் உள்ள சிக்கல்களை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊழல் இல்லாத நாட்டில் தான் வருங்காலம் மிகவும் செழிப்பாக இருக்கும். அந்த அடிப்படையில் நான் ஊழலுக்கு எதிரான இயக்கங்களுடன் நிற்கிறேன். தமிழக முதல்வரே நான் ஊழலை ஒழிப்பேன். பொதுசொத்தை தொட மாட்டேன். தொடவும் விடமாட்டேன் என்று அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியது. சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இப்படி பேசுவது வித்தியாசமாக இருக்கிறது. இது வலிமையான ஒரு அறிவிப்பு.
அது அதிகாரிகளிடம் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பதிவுத்துறை, வருவாய்த்துறை போன்ற அரசுத்துறைகளின் கீழ் மட்ட அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் தமிழக அரசு எப்படி செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதன் மூலம் ஊழலே முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஊழலை ஒழிப்பது மிகச்சாதாரணமானதல்ல. தற்போது உலகமயமாக்கல், தனியமார்மயம் நிலவுகிறது.
கார்ப்பரேட்மயமாகியுள்ள இந்த ஊழல் சமூகத்தில் மண்டிப்போயுள்ளது. இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதே சமூகத்தில் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள். சமூகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நிர்வாகமும், அதிகாரமும் இருக்கும். எனவே இந்த அரசு ஆட்சி தளத்தில் இருந்து, நிர்வாகத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது. ஆட்சிக்கு தளத்தில், அரசு நிர்வாகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது என்றால் சமூகத்தில் அதிகளவு இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.
ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் சமூகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும், குடிமகனும் நேர்மையாக இருக்க வேண்டும். தமிழ் சமூகம் மிகவும் அறம் மிகுந்த சமூகம். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரத்தில் சொன்ன சமூகம் இது. அறத்தால் வருவதே இன்பம் என்று சொன்ன சமூகம் இது. நேர்மை, அறம், வாய்மை எல்லாம் நம் அடிப்படை பண்பு.
அந்த சமூகம் இன்றைக்கு ஊழல் சிந்தனையில் மலிந்து போயுள்ளது என்று ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். ஒப்புக் கொள்வதே முன்னேற்றத்தின் முதல்படி. சமூகத்தில் இருந்து மாற்றங்களை உருவாக்க முடியும். தமிழக அரசிடம் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். ஊழலை ஒழிப்பேன் என்று முதல்வரே சொல்வது வலிமையான சொற்றொடர். அதை ஒரு வலுவான ஆயுதமாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஏந்தி நிற்கிறது” என்றார்.
