தி.மு.கவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையாக பேசிய துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய கருத்துகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா பங்கேற்று பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் அவரது பிறப்பு குறித்தும் பேசினார். இது மிகப்பெரிய அளவில் கண்டனத்தைப் பெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் “கண்ணியம்” தவறுவது தொடர்கிறது. “கட்டுப்பாடு” நிலை நிறுத்தும் “கடமை”யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
