சென்னை: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து மீண்டும் தண்ணீரை எடுக்கும் பணிகளில் நீர்வளத் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் சோதனை முயற்சியில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் முழுவதுமாக வறண்டு போன போது இங்கிருக்கும் குவாரி நீரை தமிழக அரசு சென்னைக்கு கொண்டு வந்தது.
மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் மொத்தம் 23 கல் குவாரிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை. மழைநீரால் குவாரிகள் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அதிமுக ஆட்சியில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரின்றி வற்றியது.
இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு, சிக்கராயபுரம் கல்குவாரிகளில் தேங்கியிருந்த மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, குழாய்கள் வழியாக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று விநியோகித்தது.
2019ஆம் ஆண்டு வரை இந்த கல்குவாரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீரானது. இதையடுத்து செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் போதிய நீர் வரத்து இருந்ததால் கல்குவாரி நீரை எடுப்பது படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் தற்போது சிக்கராயபுரம் கல்குவாரி நீரை மீண்டும் பயன்படுத்த பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளது. அதாவது செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 16 அடியாக காணப்படுகிறது. வரும் மாதங்களில் மழைப் பொழிவு குறைய வாய்ப்பிருப்பதாலும் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் இந்த கல்குவாரி நீரை மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்த பொதுப் பணித் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி பல ஆண்டுகளுக்கு பிறகு கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்படுவதால் பழைய குழாய் பாதைகளில் ஏதேனும் அடைப்பு அல்லது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். குவாரியில் நீரில் மிதக்கும் ராட்சத மின்சார மோட்டார்களை பொருத்தி தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
எனவே விரைவில் கல்குவாரி நீரானது சென்னைக்கு குடிநீராக கொண்டு வரப்படும் என தெரிகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிக்கராயபுரம் கல் குவாரியில் குப்பைகளை மக்கள் கொட்டி வந்தனர். இதனால் அந்த டன் கணக்கான குப்பைகளை அங்கிருந்து அகற்றி மிகப் பெரிய நீர்த் தேக்கமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த 2017ஆம் ஆண்டை போல் மீண்டும் இந்த கல்குவாரி நீர், சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வைக் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
