நெல்லை: கரூர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து திருமாவளவன் பேசியது ஒரு மணி நேர உரை அதனை திரித்து வெட்டி ஒட்டி திரிபு வாதம் செய்து பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர் என நெல்லையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காதல் திருமணம் செய்த தம்பதிகளை சரமாரியாக பெண்ணின் தந்தை வெட்டிய விவகாரத்தில் படுகாயம் அடைந்த ஆகாஷ் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆகாஷ் என்பவர் காதல் திருமணம் செய்தவர். இவர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
காதல் திருமணம் செய்த ஆகாஷின் மாமனார் இந்த மிக மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அனைத்து சாதியிலும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.
ஆணவச் சம்பவங்கள் சமூகத்திற்கு எதிரான சம்பவம். இந்த சமூகத்தில் இதுபோன்ற மோசமான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. விரைவில் சட்டம் இயற்றப்படும். விஜய்யை கரூர் சம்பவத்தில் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் என திருமா பேசியது 1 மணி நேர உரை.
இந்த உரையை வெட்டி ஒட்டி திரிபுவாதம் செய்யப்படுகிறது. திமுக எங்களை கைவிட்டது எனவும் அந்த உரையில் இடம்பெற்றது. ஆனால் அதனைப் பேசாமல் அவரது உரை திரிபுவாதம் செய்து பரப்பப்படுகிறது.
காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்டி பிரிவுக்கான சான்றிதழ் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் சாதிச் சான்றிதழை பெறுவதில் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. பழங்குடியினர் 1% தான் உள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும் என அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பழங்குடியினருக்கான நிதி 466 கோடி மத்திய அரசால் வழங்க வேண்டியுள்ளது. அதனை மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வேண்டிய நிலை உள்ளது. சாதிச் சான்றிதழைக் காரணம் காட்டி மாணவர்களை வெளியேற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்பது திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிலைப்பாடுகளாக கடந்த காலங்களில் இருந்தது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஓமந்தூரில் புதிய சட்டமன்றம் அமைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய சட்டமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.
தற்போது புதிய சட்டமன்றம் அமைப்பதில் யாருக்கும் இந்த பிரச்சனையும் இல்லை. அதனை அமைக்க போகும் இடம் தான் இப்போது பிரச்சினையாக உள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியில் சுனாமி, மீனவர் பிரச்சனை போன்றவைகளால் பாதிப்பு ஏற்படும் என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அவர்களுடைய அனுமதியுடன் தான் அரசு நடவடிக்கை எடுக்கும், மக்களின் கருத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது. மக்களின் உணர்வை ஏற்றுக் கொண்டு அரசு செயல்படும்.
மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என எங்கள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் வழிமொழிகிறோம் என தெரிவித்தார்.
