இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல்: 102 பேர் மீட்பு; 140 பேரின் கதி என்ன?

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் 242 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 140-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் பகுதியை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்தனர்.

​கப்பல் ஜாவா கடல் பகுதியை கடந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவியது. இதில் கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து, கட்டுப்பாட்டு மையத்துடனான அதன் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதுடன், கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் இந்தோனேசிய கடலோரக் காவல் படை மற்றும் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் இறங்கினர். கடலில் தத்தளித்த 102 பேரை பத்திரமாக மீட்டெடுத்து முதலுதவி அளித்தனர்.

மேலும் மாயமான 140 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடலில் மூழ்கியவர்களைக் கண்டறிய ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ரோந்து படகுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்து வருகிறது.

Source link