‘அ.தி.மு.க தலைமைக்கு நான் சொல்ல விரும்புவது… அம்மா என்ற சக்தி சொல்ல வைக்கிறது’: பூங்குன்றன் பதிவு

அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு யாரும் தேவையில்லை. அவ்வளவு வலிமையான இயக்கம் அது. இப்போது இருக்கும் தலைவரும் மிகுந்த வலிமை மிக்கவர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது; 

புதிதாக கட்டப்பட்டுள்ள சத்குரு சாய்பாபா கோயில் குடமுழுக்க விழாவை முடித்துவிட்டு, அங்கு தரப்பட்ட பிரசாதம் உண்டதால் வந்த தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற போது, நண்பர்கள் அழைப்பிற்கிணங்க டீக்கடைக்குச் சென்றோம்.

நண்பர்களோடு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் இருவர் டீ குடித்துக் கொண்டே அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவர் சொன்னார்,

“தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் குழப்பமாக இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அ.தி.மு.க. ஒன்றுபட்டு, தான் ஒரு பலமான இயக்கம் என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டால், இப்போது நடக்கும் அரசியல் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதற்கே அதிகம்.

ஏனென்றால் இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதியுமே அ.தி.மு.க—விற்கு சாதகமான தொகுதிகள். தொடர்ந்து அவர்கள் வெற்றி பெறும் தொகுதிகள்.
இப்போது தேவை ஒன்றுதான்,

‘நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது. அந்த ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டாலே, வெற்றிக்கான பாதை எளிதாகிவிடும். 
இடைத்தேர்தலும் அவர்களுக்கு சாதகமான முடிவை தரலாம்”

என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் இருவரும் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த என் நண்பர் என்னைப் பார்த்து,

“ஏன் சார்… உங்க தலைவர் கொஞ்சம் இறங்கி வந்தால் நன்றாக இருக்குமே! இதையெல்லாம் நீங்கள் அவருக்கு சொல்லக்கூடாதா?” என்றார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு யாரும் தேவையில்லை. அவ்வளவு வலிமையான இயக்கம் அது. இப்போது இருக்கும் தலைவரும் மிகுந்த வலிமை மிக்கவர். ஆனாலும் நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது… சொல்லிப் பார்ப்போம்!”

அதனால் சொல்கிறேன். நான் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதால் சொல்கிறேன்.
நிறைய பேர் இதையெல்லாம் சொல்வதற்கு நீங்கள் யார் என்று கூடக் கேட்கிறார்கள். அதனால் சொல்லக்கூடாது என்று நினைத்து நினைத்து வருந்தினாலும்,

சில நேரங்களில் அந்த நினைவே என்னை சொல்ல வைக்கிறது.

அது அரசியல் கணக்கு அல்ல.

அது மனதின் கணக்கு.

அந்த மனதின் ஒரு மூலையில் இன்னும் ஒரு பெயர் இருக்கிறது

‘அம்மா’.

அந்தப் பெயர் வந்துவிட்டால் சில நினைவுகள் வருகின்றன.

அந்த நினைவுகள் வந்துவிட்டால் சில வார்த்தைகள் வருகின்றன.

அந்த வார்த்தைகளைச் சொல்லக்கூடாது என்று நினைத்தாலும்!

சொல்ல வைப்பது ‘அம்மா’ என்ற சக்தி!

அதனால்தான் சொல்கிறேன்..!

ஒரு இயக்கம் வெற்றி பெறுவதற்கு முன், அது முதலில் தன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதை மக்களுக்குக் காட்ட வேண்டும்.

ஒற்றுமை தெரிந்தால் பலம் தெரியும்.

பலம் தெரிந்தால் நம்பிக்கை வரும்.

நம்பிக்கை வந்தால்…

வெற்றி தொலைவில் இருக்காது!



Source link