புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது ஏன் என்று எம்.பி ஜெகத்ரட்சகன் புது விளக்கம் அளித்துள்ளார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி இன்று புதுச்சேரியில் நடந்தது. இந்நிகழ்வில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியதாவது: “மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். வாக்களித்தோருக்கு நன்றி சொல்லக்கூட ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு வரவில்லை. புதுச்சேரியில் தேர்தல் களத்தை உருவாக்கும்போது கூட்டணி தர்மத்தை திமுக கடைப்பிடித்தது.
கூட்டணி தர்மத்துக்கு உட்பட்டு அனைத்து தொகுதிகளிலும் வேலை செய்தோம். திமுக நின்ற தொகுதியில் ரணகளம் ஏற்பட்டது. அந்த புண் ஆறவில்லை. வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை விட்டுத் தந்தோம். நம் உடன் இருந்தோரே எதிரிகளாக இருந்தார். திமுக தனியாக நின்றிருந்தால் 25 தொகுதிகளில் வென்றிருப்போம். திமுக தலைவர் ஸ்டாலினிடம் தனியாக நிற்க அனுமதி கேட்டோம். கூட்டணி தர்மம் என்பதால் அனுமதிக்கவில்லை.
ஆனால் கூட்டணியில் இருந்தோர் ஒரு தோல்வி என்றவுடன் ஓடிவிட்டனர். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் செய்து காட்டுவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை. தமிழர் என்பதாலும் இரு மாநிலங்களில் தமிழ் பேசுவோர் ஆட்சியில் இருப்பார்கள் என்பதால் மாநில அந்தஸ்து தர மறுக்கிறார்கள்.
தேர்தலுக்கு பிறகு புதுச்சேரிக்கு வந்து மாநில அந்தஸ்து போராட்டம் தொடங்குவோம் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து போராடலாம். மாநில அந்தஸ்து வரும் வரை போராடலாம். புதுச்சேரிக்கு ஒரு தொழிற்சாலை கூட கடந்த ஆட்சியில் வரவில்லை. போலி மருந்து ஊழலில் ஊரே நாறிவிட்டது. புதுச்சேரியை வளரக்க திமுகவால் மட்டுமே முடியும்” என்று எம்.பி ஜெகத்ரட்சகன் கூறினார்.
