வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி பாஸ்புக் மட்டும் ஆதாரம் இல்லை: அக்டோபர் 1 முதல் புதிய சட்டம்

வங்கியில் ஒரு வேலையா? கணக்கு விவரங்களைப் பெற வேண்டும் என்றால் கிளைக்குச் சென்று பாஸ்புக் அல்லது கணக்கு அறிக்கையை அச்சிட்டு, அதிகாரியின் கையெழுத்து, முத்திரை வாங்க வேண்டிய நிலை பலருக்கும் இருந்திருக்கும். குறிப்பாக விசா விண்ணப்பம், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு இந்த நடைமுறை கூடுதல் அலைச்சலை ஏற்படுத்தும்.

ஆனால், இனி இந்த நிலை மாறப்போகிறது. டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப வங்கிப் பதிவுகளுக்கான சட்ட விதிகளில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

1891 சட்டத்தில் மாற்றம்

மாறிவரும் பொருளாதாரத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வங்கிச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 1891-ம் ஆண்டு இயற்றப்பட்ட பழமையான வங்கிப் பதிவேடுகள் ஆதாரச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தச் சட்டத்துக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 10-ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, புதிய வங்கிப் பதிவேடுகள் சட்டம் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.

பாஸ்புக் இல்லாமலேயே வேலை முடியும்!

புதிய சட்டத்தின் முக்கிய மாற்றம் என்னவென்றால், வங்கிப் பதிவுகளுக்கு காகித ஆவணங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

காகித வடிவிலான கணக்குப் புத்தகங்களுக்கு இணையாக, மின்னணு, மெய்நிகர் மற்றும் மேகக் கணினி தொழில்நுட்பத்தில் பராமரிக்கப்படும் வங்கிப் பதிவுகளுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அதாவது, இணைய வங்கி அல்லது வங்கி செயலி மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் கணக்கு அறிக்கைகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் அதிகாரபூர்வ ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

விசாவுக்கு வங்கிக்குச் செல்ல வேண்டாமா?

விசா விண்ணப்பம் போன்ற தேவைகளுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது வழக்கம். இதற்காக இதுவரை பலர் வங்கிக் கிளைக்குச் சென்று கணக்கு அறிக்கையை அச்சிட்டு, அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரையைப் பெற வேண்டியிருந்தது.

இனி, தேவையான டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை இணைய வங்கி அல்லது செயலி மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

அதேபோல், அரசு அலுவலகங்கள் மற்றும் சட்டப்பூர்வ தேவைகளிலும் இத்தகைய டிஜிட்டல் ஆவணங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மின்னணு கையொப்பத்துக்கும் அங்கீகாரம்

வங்கி ஆவணங்களுக்கு மின்னணு கையொப்பம் மூலம் சான்றளிக்கும் நடைமுறையும் புதிய சட்டத்தின் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆவணங்களை சரிபார்க்க எடுத்துக்கொள்ளும் நேரம் குறைய வாய்ப்புள்ளது. வங்கிச் சேவைகள் மற்றும் கடன் தொடர்பான நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்கள் விரைவாக முடிக்க முடியும்.

நீதிமன்றத்திலும் முக்கிய மாற்றம்

புதிய சட்டத்தில் வங்கி அதிகாரிகள் தொடர்பான நீதிமன்ற நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிக்குத் தொடர்பில்லாத தனிநபர்களின் சட்ட வழக்குகளுக்காக வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் வங்கியின் அன்றாடப் பணிகளும் வாடிக்கையாளர் சேவையும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், தவிர்க்க முடியாத சிறப்பு காரணம் இருந்தால் மட்டுமே வங்கி அதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோர வேண்டும் என்ற வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு அதிகாரியை அழைக்க நேர்ந்தால், அதற்கான காரணத்தை நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் தேவையற்ற நேர விரயம் தவிர்க்கப்பட்டு, வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர் சேவை தொடர்ந்து நடைபெற வழிவகுக்கும்.

பொதுமக்களுக்கு என்ன பயன்?

மொத்தத்தில், 1891-ம் ஆண்டைச் சேர்ந்த பழைய சட்டத்தை இன்றைய டிஜிட்டல் வங்கி நடைமுறைக்கு ஏற்ப மாற்றும் வகையில் இந்தச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாஸ்புக், அச்சிடப்பட்ட ஆவணம், அதிகாரியின் கையெழுத்து, முத்திரை என ஒவ்வொரு தேவைக்கும் வங்கிக் கிளைக்கு ஓட வேண்டிய நிலை குறையலாம்.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், வங்கிச் சேவைகளை மேலும் காகிதமில்லாததாக மாற்றுவதுடன், பொதுமக்களின் அலைச்சல், காத்திருப்பு மற்றும் நேர விரயத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link