“சீரான, தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது”

தமிழகத்தில் உள்ள  பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.  அதோடு இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தொகுப்பு மற்றும் மின் விநியோக நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின் விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை 94987 91987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link