இந்தியாவிடம் அதிகளவில் எரிபொருளை வாங்கியது ரஷ்யா

புதுடில்லி: உக்ரைனின் வான்வழி தாக்குதல்களால், ரஷ்யாவின் உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் முடங்கியதை அடுத்து, நம் நாட்டிடம் இருந்து இதுவரை இல்லாத வகையில், கடந்த ஆகஸ்டில் மட்டும், 1.72 லட்சம் டன் எரிபொருளை அந்நாடு இறக்குமதி செய்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேல் போர் நடக்கிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து, சமீப காலமாக, உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் முடங்கி உள்ளது.

இந்நிலையில், சி.ஆர்.இ.ஏ., எனப்படும், எரிசக்தி மற்றும் துாய காற்று ஆராய்ச்சி மையம், ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி மற்றும் தடைகள் குறித்து, நேற்று வெளியிட்ட மாதாந்திர அறிக்கை:

ஆகஸ்டில் மட்டும், இந்தியாவிடம் இருந்து ரஷ்யா, 1.72 லட்சம் டன் எரிபொருளை வாங்கி உள்ளது. இது, அந்நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியில், 70 சதவீதம். இதில், 864 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.20 லட்சம் டன் பெட்ரோல் அடங்கும். ரஷ்யாவின் இந்த இறக்குமதி, முந்தைய மாத சாதனையை விட, 7 மடங்கு அதிகம். 2025ல் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அளவை விட, 3 மடங்கு அதிகம்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெட்ரோல் அனைத்தும், குஜராத்தின் வதினார் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஏற்றப்பட்டு, ஐரோப்பிய யூனியனின் தடைகளுக்கு உள்ளான, ‘நயரா எனர்ஜி’ நிறுவனத்தால், ‘ரோஸ்நெப்ட்’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து தான், வதினார் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, 100 சதவீத கச்சா எண்ணெய் கிடைக்கிறது. எனவே, உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத எரிபொருளை பெறுவதற்காக, தன் சொந்த கச்சா எண்ணெயை சுத்திகரிக்க, தன்னிடம் இருந்து கச்சா எண்ணெயை பெறும் ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கே ரஷ்யா பணம் செலுத்துகிறது.

உக்ரைனின் வான்வழி தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதால், இந்தியாவிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டிய நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியில், உலகின் முன்னணி நாடாக விளங்கிய ரஷ்யா, தன் ஏற்றுமதி குறைந்து வரும் நிலையிலும், பெட்ரோல் இறக்குமதியில் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. 2023 – 25-க்கு இடையில் சராசரியாக வெறும், 6 சதவீதமாக இருந்த பெட்ரோல், ஆகஸ்டில், அதன் மொத்த எரிபொருள் இறக்குமதியில், 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உக்ரைனின் தாக்குதல்களால், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆகஸ்டில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முந்தைய மாதத்தை விட, 58 சதவீதம் சரிந்தது. ஒட்டுமொத்தமாக, ஆகஸ்டில் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி வருவாய், 8 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link