சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் 2-வது இன்னிங்ஸ்; மீண்டும் தொகுப்பாளராக குஷ்பு: ப்ரமோ வீடியோ வைரல்

சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வெற்றிகளை கொடுத்து திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகை குஷ்பு, 16 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இது குறித்த ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், சின்னத்திரையிலும், லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியலிகளில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஜெயா டிவியில் ஜாக்பாட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். 

தற்போது அரசியல் பிரமுகராக பிஸியாக இருக்கும் குஷ்பு, 16 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் இன்று, (செப்டம்பர் 13-ம் தேதி) முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை பார்க்கலாம். கடந்த 2002-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலேயே குஷ்பு தொகுப்பாளராக இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

அதே சமயம், குஷ்புவுக்குப் பிறகு நடிகை நதியாவும் நடிகை சிம்ரனும் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் ஜாக்பாட் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக வெவ்வேறு காலகட்டங்களில் ரசிகர்களிடம் தொடர்ந்து அறிமுகமாகி வந்தது. 16 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சி இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக அரங்கம், புதிய சுற்றுகள் மற்றும் எதிர்பாராத சவால்களுடன் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக உருவாகியள்ளது.

இந்த முறை 3 அணிகள் போட்டியிடும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. கணவன் – மனைவி, நண்பர்கள் என எந்த உறவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு அணியாக இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். இதனால் குடும்ப ரசிகர்களுக்கும் நண்பர்கள் குழுவினருக்கும் ஏற்ற வகையில் போட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜாக்பாட் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஈர்ப்பாக இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பழைய நிகழ்ச்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில், ஜாக்பாட் நிகழ்ச்சியின் 2-வது இன்னிங்ஸ் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link