கர்நாடக மாநிலம், பெலகாவி நகரில் உள்ள சாவத் கல்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (14-09-26) நள்ளிரவில் குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பயங்கர தீ, வீடு முழுவதும் பரவியது. அதி வேகமாகப் பரவிய இந்த தீயால், வீட்டில் இருந்தவர்கள் விரைவில் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்த வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து குறித்து மார்க்கெட் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் வோல்டேஜ் ஏற்ற இறக்கம் காரணமாக பிரிட்ஜ் வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்திற்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று, ஊரே மகிழ்ச்சியாகக் கொண்டாட்டத்தில் இருக்கும் சமயத்தில், இப்படியான ஒரு சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
